சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி  கிரிவலம் சென்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி  கிரிவலம் சென்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
Updated on
2 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி வியாழக்கிழமை இரவு முதல்10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றுள்ளனர்.

பார்வதி தேவி வரைந்த குழந்தையின் சித்திரம் மிக தத்ரூபமாக இருந்தது. அந்த சித்திரத்தின் மீது தனது மூச்சுக்காற்றை படர செய்து, சிவபெருமான் உயிர் கொடுத்தார். உயிர் பெற்ற குழந்தை தவழ்ந்தது, பார்வதி தேவியும் மகிழ்ந்தார். சித்திரத்தால் உருவானதால், அக்குழந்தை சித்திர குப்தன் என அழைக்கப்பட்டார். அவ்வாறு சித்திர குப்தன் மலர்ந்த நாள்தான், சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி திதியாகும். பின்னர் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தனாக பிரம்மாவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவே சித்ரா பவுர்ணமி உருவான வரலாறு என புராணங்கள் கூறுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற சித்ரா பவுர்ணமி விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், அம்மன் சன்னதி எதிரே உள்ள சித்திர குப்தன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் சித்திர குப்தனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர்.

சித்ரா பவுர்ணமியன்று, மலையே மகேசன் என போற்றப்படும் 14 கி.மீ., தொலைவுள்ள அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். பக்தர்களின் கிரிவலம் வியாழக்கிழமை இரவு தொடங்கி இடைவிடாமல், இன்று அதிகாலை வரை விடிய விடிய சென்றது. ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி பக்தர்கள் சென்றனர். ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலை மற்றும் அஷ்ட லிங்கங்கள் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். வெயில் சுட்டெரித்தும், அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஒட்டுமொத்தமாக, சுமார் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் பக்தர்களின் கிரிவலம் தொடரும். பாதுபாப்பு பணியில் சுமார் 4,500 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருவண்ணாமலை நகரம் மற்றும்ப் கிரிவல பாதையை சுத்தம் செய்யும் பணியை தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in