

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்தியாவிலேயே காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்த சுவாமிக்கு தனி கோயில் உள்ளது. இது கேது ஸ்தலங்களில் முதன்மையானதாகவும் இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள கர்ணகி அம்பாள் உடனுறை சித்ரகுப்த சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி யாக சாலை பூஜைகள் இந்த மாதம் 1-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின.
இந்த யாகசாலையில் 16 குண்டங்கள் அமைக்கப்பட்டு 34 சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். யாகசாலையில் இருந்து சிவாச்சாரியர்கள் புனித நீர் குடங்களை மங்கல இசை வாத்தியங்களுடன் நேற்று ராஜகோபுரத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இரவு கோயிலில் கர்ணகி அம்பாளுக்கும், சித்ரகுப்த சுவாமிக்கு திருக்கல்யாணமும் பின்னர் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் கே.எம்.ரகுராமன், உறுப்பினர்கள் தே.சந்தானம், ரா.ராஜமணி மற்றும் கோயில் செயல் அலுவலர் அமுதா ஆகியோர் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
இந்த விழாவில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுபோத்கான் சகாய், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கே.சின்ஹா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜு, உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நித்யா சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.