

கம்பம்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நாளை (மே 5) நடைபெற உள்ளது. அங்கு 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பத்தில் உணவு தயாரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் தமிழக எல்லையோரம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் விண்ணேற்றிப்பாறை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத முழுநிலவு தினத்தில் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (மே 5) நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுப் பணிகளை மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வருகின்றன. 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டு சமையலுக்கான பணிகள் கடந்த 2 நாட்களாக கம்பம் நேதாஜி நகரில் தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காய்கறிகளை வெட்டித் தரும் பணிகளை கண்ணகி அறக்கட்டளை மகளிர் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் சேவை நோக்கிலும், வேண்டுதலுக்காகவும் பலரும் குழுவாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க உள்ள மஞ்சள், குங்குமப் பாக்கெட்டுகளை நேதாஜி அறக்கட்டளை வளாகத்தில் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கண்ணகி அறக்கட்டளை மகளிர் குழு தலைவி சே.சாந்தி கூறுகையில், கடந்த 2 நாட்களாக 130 கிலோ பூண்டு, 200 கிலோ இஞ்சி ஆகியவற்றை உரித்துள்ளோம். மாங்காய், தக்காளியை நறுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இதைத் தொடர்ந்து பிற்பகலில் இருந்து சமையல் பணி தொடங்கும் என்றார்.
இது குறித்து அறங்காவலர் சோ.பஞ்சுராஜா கூறுகையில், திருநீறு, மஞ்சள், குங்குமம் பாக்கெட்களை 30 ஆயிரம் பேருக்கு வழங்க இருக்கிறோம். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக இப்பணி நடைபெற்று வருகிறது. பளியன்குடி வழியாக மலைப் பாதையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக 5 லிட்டர் குடிநீர் கேன்களை வழங்க உள்ளோம்.
அன்னதானத்துக்காக தயார் சாதம், தக்காளி சாதம் தயாரித்து வருகிறோம். மே 5-ம் தேதி அதிகாலையில் அன்னதான உணவு 6 டிராக்டர்களில் தேக்கடி, கொக்கரக்கண்டம் மலை வழியே கண்ணகி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். ஒரு டிராக்டர் பளியன்குடிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது என்று கூறினார்.