

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மாசி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ‘‘ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா’ என்ற முழக்கம் விண்ணதிர பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வந்தனர்.
இதில் முக்கிய விழாவான திருக்கல்யாணம் கோயிலின் வடக்காடி வீதி திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருக்கல்யாணத்துக்காக திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினர்.
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.15 மணியளவில் அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி கோயிலிலிருந்து புறப்பாடாகி கீழமாசி வீதியிலுள்ள தேரடிக்கு வந்தனர். அங்குள்ள கருப்பணசாமி கோயிலில் தீபாராதனை முடிந்து பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.
காலை 6.35 மணியளவில் சுவாமி தேர் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மன் தேர் 6.55 மணியளவில் புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நிலையிலிருந்து புறப்பாடானது. மாசி வீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா’ என்று விண்ணதிர முழங்கினர்.
பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடிய சுவாமி தேர் பிற்பகல் 12.35 மணிக்கும், அம்மன் தேர் பிற்பகல் 12.55 மணிக்கும் நிலையை அடைந்தன. இரவு 7 மணியளவில் சப்தாவர்ணச் சப்பரத்தில் பிரியா விடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளினர்.
இன்று (மே 4) தீர்த்தத் திருவிழா மற்றும் தேவேந்திர பூஜையும், இரவு 7 மணியளவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளுகின்றனர். இரவு 10.15 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, பவளக்கனிவாய்ப் பெருமாள் 16 கால் மண்டபத்தில் விடைபெறும் நிகழ்வோடு திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையர் அருணாச்சலம் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.