

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையொட்டி நேற்று மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் பங்கேற்ற நீதிபதிகள், அரசுத் துறை உயரதிகாரிகள், அரசியல் கட்சியினர், முக்கியப் பிரமுகர்கள், உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் என தனித்தனியாக அமரும் வகையில் இரும்பு வேலியால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
திருக்கல்யாணத்தின்போது கோயிலுக்கு வெளியிலும் பக்தர்கள் காணும் வகையில் நிர்வாகம் சார்பில் 20 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் ஒளிபரப்பப்பட்டன. இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந் தனர். திருக்கல்யாணத்தின்போது மணமான பெண்கள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்.
இந்தத் திருக்கல்யாணத்தில் வெளி மாநிலத்தவர், வெளி நாட்டினர் பலர் கலந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்ததும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயிலைச் சுற்றிலும் தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல், பானகம், குளிர் பானங்களை பக்தர்களுக்கு வழங்கினர்.
ஜவுளிக் கடைக்காரர்கள், தங்க நகைக்கடைக்காரர்கள், மற்றும் சிறு வியாபாரிகள் ஆங்காங்கே பக்தர்களுக்கு சிற்றுண்டி உணவுகளை வழங்கினர். சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பழமுதிர்ச்சோலை முருகன் பக்த சபை சார்பில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்து காலை முதல் மாலை வரை நடந்தது.
திருக்கல்யாணத்தையொட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் க.ச.நரேந்திரன் நாயர் தலைமையில் துணை ஆணையர்கள் சாய் பிரனீத், அரவிந்தன், ஆறுமுகசாமி, கூடுதல் உதவி ஆணையர் திருமலைக் குமார், உதவி ஆணையர்கள் வேல்முருகன், காமாட்சி, போக்கு வரத்து உதவி ஆணையர் செல்வின், மாரியப்பன் மற்றும் 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மொய் எழுதிய பக்தர்கள்: திருக்கல்யாணம் முடிந்ததும் கோயில் வளாகத்துக்குள் கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மொய் எழுதும் இடத்தில் பக்தர்கள் ரூ.50, ரூ.100 என மொய் எழுதினர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தில் பங்கேற்றவர்களுக்கு மயிலிறகு, துணியாலான விசிறி மூலம் சேவார்த்திகள் வீசிவிட்டனர்.