

ஸ்ரீவில்லிபுத்தூர்: சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில், பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பிறகு பக்தர்கள் கோயிலில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் மலையேறுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த நாட்களிலும், மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதையடுத்து வரும் 3-ம் தேதி சித்திரை மாத பிரதோஷம் மற்றும் 5-ம் தேதி சித்ரா பவுர்ணமிக்கு அனுமதி வழங்கப்படுமா என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.