

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வட்டம், களிமேட்டில் அப்பர் குரு பூஜை சப்பர வீதியுலாவை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என சூரியனார் கோயில் ஆதினம் வலியுறுத்தியுள்ளார்.
சூரியனார் கோயில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனத்தில் உலக நன்மைக்காக அங்குள்ள குரு முதல்வருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, “சீர்காழி சட்டை நாதர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி உற்சவர் சிலைகள், செப்பேடுகள் தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடியவையாகும். இவை கிடைத்திருப்பது ஆன்மிகத்திற்கு வலு சேர்ப்பதாகும். இந்தச் சிலைகளை சுத்தம் செய்து, ஆகம விதிப்படி பூஜை செய்து, வீதியுலா புறப்பாடு செய்ய வேண்டும்.
மேலும் செப்பேடுகளை, பக்தர்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்த வேண்டும். இதற்கு தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் முழு முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள், தொல்லியல் துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தஞ்சாவூர் வட்டம், களிமேடு கிராமத்தில் கடந்த ஆண்டு 94-வது அப்பர் குருபூஜை சப்பர வீதியுலாவின்போது எதிர்பாராத விதமாக அசம்பாவிதம் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினர் முழு மன அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம். எனவே தமிழக அரசு, உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டு, நிகழாண்டு அப்பர் குருபூஜை சப்பர வீதியுலா நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.