

மாமல்லபுரம்: செங்கை மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில்,இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில், விழாவின் 3-ம் நாளான நேற்று அதிகார நந்தி மற்றும் 63 நாயன்மார்களின் உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அதிகார நந்தியின் மீது வேதகிரீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி, அம்பாளுடன் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும்63 நாயன்மார்களும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதையடுத்து, 63 நாயன்மார்களும் சுவாமியை வணங்கியபடி ஊர்வலமாக செல்ல, முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி வீதியுலா நடைபெற்றது. மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் சுவாமி உலா செல்ல, பக்தர்கள் சுவாமியை வணங்கியபடி கிரிவலம் வந்தனர்.
இதில், திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புறங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோடை வெயிலால் கடும் வெப்பம் இருந்ததால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலைகளில் டேங்கர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
மேலும், சிறப்பு மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. மே 1-ம் தேதி, சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத உற்சவம் நடைபெற உள்ளது.