

கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி 2-ம் நாளான இன்று சாரங்கபாணி மற்றும் சக்கரபாணி சுவாமிகள், விஜீயேந்திரர் மடத்திற்கு எழுந்தருளினர்.
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அந்நிய படையெடுப்பின்போது, திருக்கோயில்களையும், அதன் சிலைகளையும் சேதப்படுத்த முற்பட்டபோது, விஜீயேந்திர தீர்த்த சுவாமிகள், சாரங்கபாணி மற்றும் சக்கரராஜா ஆகிய 2 உற்சவர் சிலைகளைப் பாதுகாத்து, தனது மூலராமர் சிலையுடன் 3 கால பூஜைகள் செய்து வழிபட்டு, மீண்டும் இக்கோயில்களுக்குக் கிடைப்பதற்கு வழிவகை செய்தார். அதன் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவான 2-ம் நாளில் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு சாரங்கபாணி மற்றும் சக்கரபாணி சுவாமிகள், சோலையப்பன் தெருவிலுள்ள விஜீயேந்திர மடத்திற்கு எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து, மடத்தின் சம்பிரதாயப்படி சாலிகிராம பூஜையும், கோயில் அர்ச்சகர்களால் திருவடி திருமஞ்சனம் கண்டருளி, திருமடத்தின் ஆஸ்தான மண்டபத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர், மீண்டும் கோயில்களுக்கு வீதியுலாவாக, கோயிலுக்கு தூக்கிச் சென்றனர்.