கோவை தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று அக்னிசட்டி ஏந்திவந்த பக்தர்கள்.  படம்: ஜெ.மனோகரன்
கோவை தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று அக்னிசட்டி ஏந்திவந்த பக்தர்கள். படம்: ஜெ.மனோகரன்

தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா - அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்

Published on

கோவை: கோவை - அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று காலை 7 மணியளவில் சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. கோனியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், சக்தி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, சிரியன் சர்ச் சாலை, புரூக்பாண்ட் சாலை, அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதி, காளீஸ்வரா மில் சாலை, சோமசுந்தரா மில் சாலை வழியாக அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா சாலை வழியாக ஊர்வலம் தண்டு மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது.

இதையொட்டி, மாநகரில் நேற்று மதியம் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in