

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு நேற்றிரவு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
குரு பகவான் நேற்றிரவு 11.27 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் நேற்றிரவு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குரு பெயர்ச்சியையொட்டி, மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக, இக்கோயிலில் ஏப்.16 முதல் ஏப்.20 வரை முதற்கட்ட லட்சார்ச்சனை முடிவடைந்துள்ள நிலையில், ஏப்.27 முதல் மே 1 வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
இதேபோல, தஞ்சாவூர் அருகே குரு பரிகாரத் தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நேற்றிரவு குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை முதல் குருபகவானுக்கு சிறப்பு யாகம், மாலையில் சந்தனகாப்பு அலங்காரம், இரவு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது. இன்று அதிகாலை 2 மணி வரை நடை திறக்கப்பட்டிருந்தது.