அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் ஏப்.23-ல் 12 கருட சேவை உற்சவம்

அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் ஏப்.23-ல் 12 கருட சேவை உற்சவம்
Updated on
1 min read

கும்பகோணம்: அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் ஏப்.23-ம் தேதி 12 கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது.

அட்சய திருதியையொட்டி, கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். நிகழாண்டு, ஏப்.23-ம் தேதி கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தரவுள்ளனர்.

இதில், சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணி சுவாமி, ராம சுவாமி, ஆதிவராக சுவாமி, ராஜகோபால சுவாமி, கொட்டையூர் நவநீத கிருஷ்ண சுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட 12 கோயில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுவர். அப்போது, எதிரில் ஆஞ்சநேயர் எழுந்தருளியவுடன், அந்த பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும்.

அதன்படி, அன்று காலை முதல் பகல் 1 மணி வரை அலங்கார பந்தலில் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்க உள்ளனர். இந்த 12 பெருமாள் சுவாமிகளையும் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். கருட சேவைக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் காசுக்கடை தர்ம வர்த்தகர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in