

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் ‘ரங்கா, கோவிந்தா’ என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழா ஏப்.11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் உற்சவரான நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய உற்சவமான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்து சேர்ந்தார்.
6 மணிக்கு தொடங்கியது: அதன்பின், அதிகாலை 5.15 மணிக்கு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ரங்கா, கோவிந்தா’ என பக்தி கோஷங்கள் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழ சித்திரை வீதியிலிருந்து புறப்பட்ட தேர், தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9.30 மணிக்கு நிலையை அடைந்தது. அங்கு, பக்தர்கள் தேரின் முன்பு தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.
விழாவையொட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் கோயில் நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆளும் பல்லக்கு: சித்திரை தேர்த் திருவிழாவில் இன்று (ஏப்.20) சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து கொடி இறக்கப்படும். நாளை(ஏப்.21) இரவு ஆளும் பல்லக்குடன் சித்திரை தேர்த் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.