

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சொரிதலுடன் தேர்த் திருவிழா தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் பகல் 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் கலசம் பொருத்தப்பட்டது.
நேற்று காலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு விநாயகர், மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு கனகாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மதியம் 1.55 மணிக்கு அலங்கரிக்கப் பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளினார்.
இதையடுத்து நடைபெற்ற தேரோட்டத்தை, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வடம் பிடித்து தொடங்கிவைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கோயிலில் இருந்து புறப்பட்ட தேர், எம்.எஸ்.லைன் வழியாக காபி ஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டு, ஐந்து லாந்தர் உட்பட முக்கிய சாலைகள் வழியாக வந்தது.
அப்போது, பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு கல் உப்புகளை தூவி வழிபட்டனர். தேருக்கு முன்பாக விநாயகர், ஆதிபராசக்தி உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட தெய்வங்களின் சிறிய தேர்கள் சென்றன. தேரோட்டத்தையொட்டி, உதகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதேபோல, குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேர்த் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.