

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மே 2-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணத்தன்று வெளியூர், வெளிநாடு பக்தர்கள் மொய் காணிக்கையை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக, கோயில் துணை ஆணையர் ஆ.அருணாசலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்.22-ம் தேதி முதல் மே 4 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் முக்கிய உற்சவமான திருக்கல்யாணம் மே 2-ம் தேதி கோயில் வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்துக்கு ரூ.50, ரூ.100 மொய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத் துறை இணையதளமான https://hrce.tn.gov.in மற்றும் கோயிலின் இணையதளத்தில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in மே 2 அன்று மொய் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி மொய் காணிக்கை செலுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.