Last Updated : 28 Sep, 2017 11:45 AM

 

Published : 28 Sep 2017 11:45 AM
Last Updated : 28 Sep 2017 11:45 AM

வலைப்பூ வாசம்: பின்னடைவைத் திருப்புமுனையாக மாற்றலாம்!

நா

ம் எல்லோருமே வாழ்க்கையில் ‘விட்டால் போதும்’ என்ற கட்டத்தை எட்டியிருப்போம். அந்தக் கட்டத்தில், நீங்கள் ஒருவிதமான மூச்சுத்திணறலை உணரத் தொடங்கியிருப்பீர்கள். உங்களது கண்கள், தோல்வியை நோக்கி வெறித்து நகரத் தொடங்கி இருக்கும். நீங்கள் உங்களை மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்வீர்கள். ஆனால், வாழ்க்கையில் சந்திக்கும் இந்த உடைவுகளை அவ்வளவு சீக்கரத்தில் சீர்செய்ய முடியாது. அதைச் சரிசெய்யத் தேவை இல்லை என்று சொல்கிறேன். உங்களது கண்ணோட்டத்தைச் சற்று மாற்றினால், இந்தப் பின்னடைவையே உங்களால் திருப்புமுனையாக மாற்றமுடியும்.

பின்னடைவைத் திருப்புமுனையாக மாற்றுவதென்பது புத்தரின் பார்வையில் வாழ்க்கையின் யதார்த்தங்களை அணுகுவதாகும். வாழ்க்கையின் மிகச் சிறந்த சாகசம் என்பது பின்னடைவை முழு விழிப்புடனும் மனத்தெளிவுடனும் எதிர்கொள்வதாகும். இந்தப் பின்னடைவிலிருந்து எதையும் நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. அதில் எந்த உள்நோக்கமும் இருத்தல் கூடாது.

“உண்மையான மாற்றம் என்பது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். எதைப் பற்றிக்கொள்வது என்ற பரிச்சயம் இல்லாததால், உங்களுக்கு முன்பிருந்த நம்பிக்கை குறையத் தொடங்கும். நீங்கள் விரும்பியபடி காரியங்கள் நடக்காததால், உங்களைச் சந்தேகிக்கத் தொடங்குவீர்கள். நேர்மறையான எண்ணங்களுடன் நம்பிக்கையைக் கைவிடாமல் முன்னேறிச் செல்லுங்கள். உங்களது திருப்புமுனை உங்களுக்கு அருகிலேயே இருக்கலாம்” என்கிறார் ராய் டி. பென்னட்.

பின்னடைவுக்கும் திருப்புமுனைக்கும் ஒரு பாலத்தை உருவாக்க வேண்டுமானால் உங்களை வெளியிலிருந்து ஒரு சாட்சியாகப் பார்க்க வேண்டும். உங்களுடைய இருப்புக்குச் சாட்சியாக இருப்பது ஜென் நடைமுறையாகும். இதற்கு ஒருவர் தன்னுடைய எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் போன்றவற்றைப் பற்றின்மையுடன் கவனமாகப் பார்க்க வேண்டும். பின்னடைவைக் குழப்பங்களாக யோசிப்பதை உங்கள் மனதிலிருந்து அகற்றுவதற்கு ஒரு விழிப்புணர்வு ஒளி தேவைப்படும்.

இந்தக் குழப்படிகளை எதிர்கொள்வதற்குத் தியானம் ஒரு வழி. உங்கள் எண்ணங்களை கவனித்த பிறகு, அவற்றை உங்களைவிட்டுச் செல்ல அனுமதியுங்கள். எதிர்மறையான உணர்வுகளுக்கு மனதில் இடமளிக்காதீர்கள். திகைப்புடன் இருப்பதில் தவறில்லை. ஆனால், சந்தேகங்களின் நிழலில் வாழ்வது சரியில்லை. மனதைத் தெளிவாக்கி உங்கள் பயங்களைவிட்டு வெளியே வாருங்கள்.

வாழ்க்கையைப் போலவே திருப்புமுனைகளும் அதற்கான நேரத்தை எடுத்துகொள்ளும். அதனால் உங்களிடமே நீங்கள் பொறுமையைக் கையாளுங்கள். திடமாகச் செயல்படுங்கள். பழைய பழக்கங்களை உடைக்கும் துணிச்சலான முடிவை எடுங்கள். உங்கள் இயல்பான ஆற்றலைப் பயன்படுத்த முடியாமல் தடுக்கும் வரம்புகளை உடையுங்கள். அப்படிச் செய்யும்போது எத்தனை சக்தியையும் சுயாதீனத்தையும் இந்த திருப்புமுனை உருவாக்குகிறது என்பதைப் பார்த்து வியப்பீர்கள்.

எண்ணங்கள்தான் ஆற்றல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால், நேர்மறையான எண்ணங்களை படைக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் பின்னடைவு திருப்புமுனையாக மாறும்.

(‘Feeling Buddhaful’ என்ற வலைப்பூவில் சுய விழிப்புணர்வு பற்றிப் பேசும் பல கட்டுரைகளை ஜாஸ் கில் (Jasz Gill) என்னும் இந்திய-கனடிய எழுத்தாளர் எழுதிவருகிறார். மனித மனத்தின் வளர்ச்சி, உணர்வுசார் அறிவு, சுய-அன்பு, ஜென் தத்துவம், பரிவு பற்றி இவர் 2010-ம் ஆண்டிலிருந்து எழுதிவருகிறார். இவரது வலைப்பூவின் மதாந்திர வாசகர்களின் எண்ணிக்கை 1,16,000 பேரைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.)

மிழில்: கௌரி

வலைப்பூவின் முகவரி: http://feelingbuddhaful.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x