Published : 10 Apr 2023 06:11 AM
Last Updated : 10 Apr 2023 06:11 AM

பங்குனி திருவிழா கோலாகலம் | திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்: மலையை சுற்றி குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர். படங்கள்: நா.தங்கரத்தினம்

மதுரை

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்கக் குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

10-ம் நாள் சூரசம்ஹார லீலை, 11-ம் நாள் பட்டாபிஷேகம், 12-ம் நாள் மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணியளவில் உற்சவர் சந்நிதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் இருவரும் சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

காலை 6.25 மணியளவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ‘அரோகரா, அரோகரா’ என பக்தர்கள் முழக்கமிட்டனர்.

தேரில் எழுந்தருளிய சுப்பிரமணிய
சுவாமி தெய்வானை.

3.2 கி.மீ. தூரம்: மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் சுமார் 3.2 கி.மீ. தூரத்தைக் கடந்து காலை 10.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிரிவலப் பாதையைச் சுற்றிலும் பல இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டன.

இதில் எம்எல்ஏக்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), வி.வி.ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்), மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் சுவிதா விமல், பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் வ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவின் 14-ம் நாளான இன்று (ஏப்.10) சரவணப்பொய்கையில் தீர்த்தவாரி நடைபெறும். மாலையில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையிலான பணியாளர்கள் செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x