Published : 10 Apr 2023 05:30 AM
Last Updated : 10 Apr 2023 05:30 AM

தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்: உயிர்ப்பு பெருவிழா சிறப்பு வழிபாடு

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, சாந்தோம் தேவாலயத்தில் மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். படம்: ம.பிரபு

சென்னை: தமிழகத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு தவக்காலம் பிப்ரவரி 22-ம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது. பின்னர், பெரிய வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக அவர் பட்ட பாடுகளை எடுத்துக் கூறும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது. இதையடுத்து சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்த 3-வது நாளை உயிர்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகையாகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

நள்ளிரவு சிறப்பு திருப்பலி: அந்த வகையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள், ஜெபங்கள் நடைபெற்றன. பின்னர், இயேசு உயிர்தெழுந்த நிகழ்வு தேவாலயத்தில் அரங்கேற்றப்பட்டது. அந்த நிகழ்வை வாணவேடிக்கைகளுடன் கிறிஸ்தவர்கள் வரவேற்றனர்.

தீர்த்தம் தெளிப்பு: பின்னர், திருப்பலியில் பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையிலான பாதிரியார்கள், கிறிஸ்தவர்கள் மீது தெளித்து அருளாசி வழங்கினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம், மயிலாப்பூரில் உள்ள லஸ் தேவாலயம், பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் மலை தேவாலயம், சின்னமலை ஆரோக்கிய அன்னை திருத்தலம் என சென்னை மற்றும் புறநகர் உட்படத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன.

பல தேவாலயங்களில் இயேசு உயிர்த்தெழுதல் லேசர் விளக்குகளாலும், நாடகங்களாலும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டன. பின்னர் 12 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் பட்டாசுகளை வெடித்தும், கேக்குகளை பரிமாறியும் இயேசு உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x