

மதுரை: திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேசுவரர் பங்கேற்று அருள்பாலித்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 26-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்கக்குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. 10 -ம் நாளில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. 11-ம் நாளான நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடந்தது.
12-ம் நாளான நேற்று திருக்கல்யாணத்தையொட்டி அதிகாலையில் உற்சவர் சந்நதியில் சுவாமி, அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்பட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அப்போது, மதுரையிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துக்காக புறப்பாடாகி மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்துக்கு வந்தனர்.
அங்கு அவர்களை முருகப் பெருமான் எதிர்கொண்டு வரவேற்கும் படலம் நடந்தது. பின்னர் கோயிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில், கன்னி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அதை தொடர்ந்து, திருவாட்சி மண்டபத்திலுள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளினர்.
அங்கு திருமணக் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். பகல் 12.35 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா’ என பக்தி கோஷம் எழுப்பியவாறு தரிசனம் செய்தனர்.
பின்னர் பெண்கள் புதுத்தாலி அணிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு வெள்ளி கவுதா யானை வாகனத்தில் சுப்பிரமணியரும், தெய்வானை அம்மன் ஆனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி, 16 கால் மண்டபத்தில் விடைபெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் கோயிலுக்கு புறப்பாடாகி சேர்த்தியாகினர்.
13-ம் நாளான இன்று முக்கியத் திருவிழாவான தேரோட்டம் காலை 6 மணியளவில் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.