

சென்னை: வடபழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, 3 நாள் தெப்பத் திருவிழாநேற்று தொடங்கியது. கடந்த 1-ம் தேதி முதல் 3 வரைலட்சார்ச்சனை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 3 நாள் தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. அப்போது சிறப்புஅலங்காரத்துடன் வேதபாராயண, நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது.
முதல் நாள் தெப்பத்தில் வடபழநிமுருகன் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இரண்டாம் நாளான இன்று சண்முகர். வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாளான நாளை சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாம்படை வீடு திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 4-ம் தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.