

திருவாரூர்: திருவாரூரில் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கத்துடன் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாகவும், சைவ சமயகுரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சந்திரசேகரர், அம்பாள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக, தேரோட்டத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு தியாகராஜ பெருமான் அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து, விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு, தேரோடும் வீதிகளில் வலம் வந்தன. அதன்பின், ஆழித்தேரோட்டத்தை காலை 7.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தி.சாரு, நாகை எம்.பி. எம்.செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கலைவாணன், எஸ்.பி. சுரேஷ்குமார் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேரில் இணைக்கப்பட்டிருந்த 500 மீட்டர் நீளமுள்ள 4 வடங்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிடித்து ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கத்துடன் தேரோடும் வீதிகளில் இழுத்துச் சென்றனர். அப்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார் திருக்கூட்டத்தினர் பஞ்ச வாத்தியங்களை இசைத்தபடி சென்றனர். அப்போது, தேரை தள்ளவும், இயக்கத்தை கட்டுப்படுத்தவும் புல்டோசர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
இந்த தேர் மாலை 6 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்ட விழாவில் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ பரமாச்சார்ய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள், ராஜன் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 1,535 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆழித்தேரோட்டம் வழக்கமாக ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்படும். ஆனால், பல்வேறு காரணங்களால் 28 ஆண்டுகளாக பல்வேறு நாட்களில் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளை தொடர்ந்து 3-வது ஆண்டாக ஆயில்ய நட்சத்திரத்தில் நேற்று ஆழித்தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.