

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவின் 3-ம் நாளான நேற்று அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விமரிசையாக நடந்து வருகிறது.
அன்று இரவு அம்மை மயில் வடிவத்தில் சிவபூஜை காட்சியும், புன்னைமர, கற்பகமர, வேங்கைமர வாகனங்கள் புறப்பாடும் நடந்தது. 2-ம் நாள் விழாவில், காலையில் வெள்ளி சூரிய வட்டம், இரவில் வெள்ளி சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.
திருமுலைப்பால் விழா: இந்நிலையில், பங்குனி பெருவிழாவின் 3-ம் நாளான நேற்று காலை 5.45 மணிக்கு அதிகார நந்தி சேவை கோலாகலமாக நடைபெற்றது. கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் உலா வந்தனர். விநாயகர், சிங்கார வேலர் தனித்தனிவாகனங்களில் உலா வந்தனர்.
தொடர்ந்து, கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்விடை வாகனங்களில் பரிவார தேவதைகள் உலா வந்தனர். மாட வீதிகளின் இருபுறமும் நின்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது, 4 மாட வீதிகள் உட்பட மயிலாப்பூரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
ஏப்.3-ல் அறுபத்து மூவர் விழா: பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.3-ம்தேதியும், அறுபத்து மூவர் விழா ஏப்.4-ம் தேதியும் நடைபெறுகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் பணியில் கோயில் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.