

திருப்பதி: திருப்பதி நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற கோதண்டராமர் திருக்கோயில் உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் கடந்த 20-ம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கரோனா பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு முழுமையான பிரம்மோற்சவம் அனைத்து வாகன சேவைகளுடன் பழைய உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் சீதாதேவி, ஸ்ரீராமர், லட்சுமணர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் கோயிலின் கபில தீர்த்தத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். அங்குசிறப்பு திருமஞ்சனம் நடை பெற்றது. தொடர்ந்து, சக்கர ஸ்நான நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.