

சென்னை: பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்விழாவுக்கு சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில், இந்தாண்டு பங்குனி பெருவிழா இன்று (மார்ச் 28-ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக நேற்று கிராம தேவதை பூஜை நடைபெற்றது. மேலும், இரவு 9 மணி அளவில் நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகன திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, இன்று காலை 7 மணிக்கு கொடியேற்று மண்டபத்தில் இறைவன் எழுந்தருளுவார். காலை 7.30 மணிமுதல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்வு நடைபெறும்.
பின்னர், இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவ காட்சி தருதல் நிகழ்வும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகனத்தில் வீதி உலா நிகழ்வும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 3-ம் தேதியும், 4-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி விழாவும், ஏப்ரல் 6-ம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறும். முன்னதாக மார்ச் 30-ம் தேதி அதிகார நந்தி காட்சி தருதல் நிகழ்ச்சி நடைபெறும்.