

மனிதர்களை மழை மற்றும் வெயிலிலிருந்து காப்பது குடை. அரசர்கள் உபயோகித்தது வெண்கொற்றக் குடை. மக்கள் தத்தமது தெய்வங்களுக்குப் பல வழிகளில் சிறப்பு செய்கிறார்கள். அந்த வகையில் அமைவதுதான் இறையவனின் தெய்வீகக் குடைகள். இவைகளில் திருப்பதிக் குடைகள், பிள்ளையார் குடைகள் போன்றவை மிகச் சிறப்புப் பெற்றவை. குடைகளை இறைவனுக்குச் சாற்றி பக்திப் பரவசம் அடைகிறார்கள்.
ஜைன தீர்த்தங்கரர்களுக்கு அசோகமரம், தேவமலர்மாரி, திவ்யத்தொனி, சாமரம், சிம்மாசனம், ஒளி மண்டலம், தேவதுந்துபி, முக்குடையென்ற எண் வகைச் சிறப்புகளில் குடையும் ஒன்றாகும். இக்குடை ஒன்றின்மீது ஒன்றாக மூன்று குடைகளைப் பொருத்தி அமைக்கப்பட்டு, முக்குடை எனப்படும்.
அருகக் கடவுள் மூன்று உலகங்களுக்கும் உரியவரென்று இது குறிக்கும். இந்த மூன்று அடுக்கிலுள்ள ஒவ்வொறு குடையும் ஒரு பொருளை உணர்த்தும். மேலே உள்ள முதல் குடை சந்திராத்தியம் எனப்படும். அதாவது சந்திரன் உலகுக்குத் தன் குளுமையான ஒளியால் இன்பம் தருகிறது.
சூரியன் இருளை நீக்கி வெளிச்சம் அளிக்கிறது. அதுபோல பகவான் தோன்றியதும் எல்லா உயிர்களும் இன்பமடைகின்றன. பகவானின் அருளுரையால் உயிர்களின் அஞ்ஞானம் விலகுகிறதென முதல் குடை குறிக்கிறது. இடையிலுள்ள இரண்டாவது குடை நித்திய விநோதம் என அழைக்கப்படும். நடு உலகிலுள்ள மக்கள், தவத்தின் மூலமாக முக்தியடைந்து எப்பொழுதும் ஆனந்த நிலையைப் பெற அருகன் அருளுவார் என்பதைக் குறிக்கும்.
மூன்றாவது குடை சகல பாஜனம் (உதவி பெறுவர்) என்பதாகும். இது கீழ் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அருகக் கடவுளின் அருளுண்டு என்பதைக் குறிக்கும். அவரின் அருளாட்சியால் நரகத்திலுள்ள உயிரினங்களும் நற்கதியை அடைந்து இன்பமடைய முடியுமென்பதை விளக்குகிறது.
முக்குடையை ஜைனக் கடவுளரின் சிரசுக்கு மேலே அமைப்பார்கள். உற்சவ அலங்காரத்திலும் தேரின் உச்சியிலும் இம்முக்குடை உயர்ந்து நிற்கும்.