திருமலையில் உகாதி ஆஸ்தானம்: புதிய பட்டாடை உடுத்தி ஏழுமலையான் தரிசனம்

திருமலையில் உகாதி ஆஸ்தானம்: புதிய பட்டாடை உடுத்தி ஏழுமலையான் தரிசனம்
Updated on
1 min read

திருமலை: தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி திருநாள் நேற்று ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து முக்கிய கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனால் கோயில்களில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகானச ஆகம விதிகளின்படி, உகாதி ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட்டது. பெரிய மற்றும் சின்ன ஜீயர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு புதிய பட்டாடை உடுத்தப்பட்டது.

உகாதியையொட்டி நேற்று மூலவருக்கு ‘ரூபாய் ஆரத்தி’ கொடுக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் மற்றும் சேனாதிபதி விஸ்வகேசவர் ஆகியோர் முன்னிலையில் சுபக்ருத் நாம ஆண்டு பஞ்சாங்கம் வேத பண்டிதர்களால் வாசிக்கப்பட்டது. ஒவ்வொரு ராசிக்கும் உண்டான ஆண்டு பலன்கள் கூறப்பட்டன. பின்னர் உகாதி பச்சடி அங்குள்ளவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. உகாதி பண்டிகையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் தேவஸ்தான தோட்டக் கலை சார்பில் விதவிதமான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோயிலுக்கு வெளியே யும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. சிம்ம வாகனத்தில் ஸ்ரீராமர் பவனி திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற தேவஸ்தானத்தின் கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ஸ்ரீராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in