Published : 07 Sep 2017 11:35 am

Updated : 07 Sep 2017 11:35 am

 

Published : 07 Sep 2017 11:35 AM
Last Updated : 07 Sep 2017 11:35 AM

பைபிள் கதைகள் 63: கடவுள் அளித்த தண்டனை

63

ஸ்ரவேலின் பேரரசன் சாலமோனின் மரணத்திற்குப் பின், தேசம் இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று வட ராஜ்ஜியம், மற்றொன்று தென் ராஜ்ஜியம். சாலமோனின் ஊழியரும் சாமானிய குடிமக்களில் ஒருவராகவும் இருந்த யெரொபெயாமை மக்களின் மத்தியிலிருந்து கடவுள் அரசனாகத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு பத்து கோத்திரங்கள் அடங்கிய மிகப்பெரிய ராஜ்ஜியத்தைக் கொடுத்தார். அதுவே பத்து கோத்திர வடராஜ்ஜியம். சாலமோனின் மகனாகிய ரெகொபெயாமிடம் கடவுள் இரண்டு கோத்திரங்களை மட்டுமே விட்டுவைத்தார். எருசலேமை தலைநகராகக் கொண்ட அதுவே தென் ராஜ்ஜியம். இரண்டு ராஜ்ஜியங்களிலுமே பிரச்சினைகள் தலைக்குமேல் வெள்ளம்போல் சென்று விடுகின்றன.

மதம் படைத்தவனின் மதம்


‘சாமானியக் குடிமகனாக இருந்த நம்மை, கடவுள் அரசனாக்கினார்’ என்பதை அறிந்திருந்தும் யெரொபெயாம் தனது பதவி ஆசையால், வடக்குக் குடிமக்கள் எருசலேம் அரசனின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காகக் கற்பனையான ஒரு வழிபாட்டையும் அதற்கான மதத்தையும் சடங்குகளையும் உருவாக்கி மக்களை மதிமயங்கச் செய்தார். இதனால் கோபம் கொண்ட கடவுள், யெரொபெயாம் முதலில் உருவாக்கிய பெத்தேல் ஆராதனை பலி பீடத்துக்குத் தன் ஊழியர் ஒருவரை அனுப்பினார். அங்கே அரசன் யெரொபெயாம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த இறை ஊழியர் “இதோ! இந்தப் பலிபீடம் வெடித்து, அதிலிருக்கிற சாம்பல் சிதறிவிடும். உன்னை அரசனாக்கிய கடவுளே இந்தச் செய்தியை என் வழியே சொல்லி அனுப்பினார் என்பதற்கு இதுவே அடையாளம்” என்று சொன்னார். உடனே கோபம் கொண்ட அரசன் பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்!” என்று கட்டளையிட்டார். உடனே அவருடைய கை விறைத்துப்போனது. அவரால் மறுபடியும் கையை மடக்க முடியவில்லை. அப்போது அந்தப் பலிபீடம் வெடித்து அதிலிருந்த சாம்பல் சிதறியது. தன் ஊழியர் மூலம் கடவுள் அனுப்பிய எச்சரிக்கை அப்படியே நிறைவேறியது.

அப்போது அரசன் உண்மைக் கடவுளின் ஊழியரிடம், “உங்களுடைய கடவுளான யகோவாவிடம் தயவுசெய்து எனக்குக் கருணை காட்டச் சொல்லுங்கள். என்னுடைய கையை பழைய நிலைக்கு வரும்படி குணமாக வேண்டுமென்று கேளுங்கள்” என்று கதறினான். அவ்வாறே ஊழியரும் கடவுளிடம் இறைஞ்ச அரசனின் கை உடனே குணமானது. அப்படியும் புதிய மதத்தைப் படைத்த அரசனின் மதம் அடங்கவில்லை. திருந்தாத அந்த அரசன், கடவுளின் ஊழியராக இல்லாதவர்களை ஆராதனை பலி பீடங்களில் குருமார்களாக நியமித்தார். குருவாக வேண்டுமென்று யாராவது ஆசைப்பட்டால், “இவனும் குருவாக இருக்கட்டும்” என்று சொல்லி நியமித்தார். யெரொபெயாமின் கடவுளுக்கு எதிரான இந்தச் செயல்களே அவரது வம்சம் அழிய காரணமாக அமைந்தது.

மனக்கண்ணால் பார்த்த தீர்க்கதரிசி

அரசன் என்கிற ஆணவம் காரணமாக கடவுளை எதிர்த்துவந்த யெரொபெயாமின் வம்சத்தை அழித்துவிடக் கடவுள் முடிவு செய்தார். யெரொபெயாமின் மகன் அபியா, எந்த நோய் என்று கண்டறியமுடியாதபடி படுக்கையில் வீழ்ந்தான். அப்போது யெரொபெயாம் தன்னுடைய மனைவியிடம், “நீ உடனே சீலோ நகரத்துக்குப் போ. அங்கே வசித்துவரும் அகியா தீர்க்கதரிசியைப் பார்த்துவிட்டு வா. இஸ்ரவேல் மக்களுக்கு நானே அரசனாக ஆக்கப்படுவேன் என்று சொன்னவர் அவர்தான். அவரே நம் மகன் உயிர் பிழைப்பான் என்பதைக் கூறமுடியும். நீ அரசனின் மனைவி என்று தெரியாமல் இருப்பதற்காக மாறுவேடத்தில் போய் வா” என்று அனுப்பினார். அரசன் கூறியபடியே தீர்க்கதரிசி அகியாவின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனாள். அகியா நூறு வயதைக் கடந்த பழுத்த கிழமாக இருந்தார். முதுமை காரணமாக அவருக்குக் கண் தெரியவில்லை. ஆனால் கடவுள் அவரை மனக்கண்ணால் காண வைத்தார்.

தன் வீட்டு வாசலில் அரசனின் மனைவி நுழைந்தபோதே அவளுடைய காலடி சத்தத்தை அகியா கேட்டார். உடனே, “யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா. ஏன் மாறுவேடத்தில் வந்திருக்கிறாய்? கடவுள் உன்னிடம் கெட்ட செய்தியைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். நீ போய் யெரொபெயாமிடம் இந்தச் செய்தியைச் சொல். ‘இஸ்ரவேலின் கடவுளான யகோவா சொல்வது என்னவென்றால், ‘நான் உன்னைச் சாதாரண மக்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுத்து, உன்னை அரசன் ஆக்கினேன். தாவீது வம்சத்தின் கையிலிருந்த ஆட்சியைப் பிடுங்கி உனக்குக் கொடுத்தேன். ஆனால், நீ என் ஊழியனான தாவீதைப் போல் நடந்துகொள்ளவில்லை. தாவீது என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தான். முழு இதயத்தோடு என் வழியில் நடந்தான். நீயோ, உனக்கு முன்பிருந்த எல்லாரையும்விட மோசமாக நடந்துகொண்டாய். அதனால், உன்னுடைய வம்சத்துக்கு முடிவுகட்டுவேன். உன் வம்சத்தின் ஆண்கள் அனைவரையும் அடியோடு அழிப்பேன். யெரொபெயாமின் வம்சத்தைச் சேர்ந்த ஆண் எவனாவது நகரத்துக்குள்ளே செத்துப்போனால் அவனை நாய்கள் தின்னும். நகரத்துக்கு வெளியே செத்துப்போனால் வானத்துப் பறவைகள் தின்னும். உன் கணவன் செய்த பாவத்தை கண்மூடித்தனமாக ஆதரித்ததால் இஸ்ரவேலர்களை கடவுள் கைவிட்டுவிடப்போகிறேன் ’. இவ்வாறு கடவுள் என்னிடம் கூறினார். இப்போது புறப்பட்டு உன் வீட்டுக்குப் போ. நகரத்துக்குள்ளே நீ காலெடுத்து வைக்கும்போது உன் மகன் இறந்துவிடுவான் ” என்று உரைத்தார்.

இதைக் கேட்டு வருந்திய யெரொபெயாமின் மனைவி, திர்சாவுக்குப் புறப்பட்டுப் போனாள். வீட்டு வாசலில் அவள் நுழைந்தபோது அவளுடைய மகன் இறந்துபோனான். இவ்வாறு அகியா கூறிய கடவுளின் வார்த்தைகள் உடனே நிறைவேறின. மகன் இறந்த பிறகும் திருந்தாத யெரொபெயாம் ரெகொபெயாமின் தென் ராஜ்ஜியம் மீது தொடர்ந்து போர் செய்துவந்தான். இப்படி தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து போர்செய்து 22 ஆண்டுகள் ஆட்சி செய்தார், அதன் பிறகு அவர் இறந்துபோனார். இஸ்ரவேலின் மிக மோசமான ராஜாக்களில் ஒருவராக யெரொபெயாம் இருந்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட தேவாலயம்

சாலமோனின் மகன் ரெகொபெயாம் தனது 41 வயதில் அரசனாக முடிசூட்டிக்கொண்டு அரசனாக இரண்டு கோத்திரங்களை ஆண்டுவந்தார். அவரது 17 ஆண்டு கால ஆட்சி யெரொபெயாமுடன் மோதி பிரிக்கப்பட்ட தேசத்தை மீட்டுவிட வேண்டும் என்ற போரிலேயே முடிந்துபோனது. தென் ராஜ்ஜியத்திலும் கடவுள் வெறுக்கிற செயல்களையே யூதா மக்கள் செய்தார்கள். ரெகொபெயாமின் ஆட்சியில் ஆண் பாலியல் தொழிலாளர்கள்கூட இருந்தார்கள். எல்லா மலைகளின் பலி பீடங்களையும் மேடுகளைக் கட்டினார்கள். கடவுள் விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான செயல்கள் எல்லாவற்றையும் யூதா மக்களும் செய்தார்கள்.

ரெகொபெயாம் ராஜா ஆட்சி நடத்திக்கொண்இருந்த ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் ராஜாவாகி சீஷாக் எருசலேம்மீது படையெடுத்து வந்தான். சாலமோன் கட்டிய கடவுளின் தேவாலயத்தில் இருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையில் இருந்த பொக்கிஷங்களையும் கொள்ளையடித்துக் கொண்டுபோனான். சில காலத்துக்கு மட்டுமே கடவுளால் அடையாளப்படுத்தப்பட்ட அந்த கம்பீர தேவாலயம் புனிதம் கெடாமல் இருந்தது.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x