பங்குனி பெருவிழா - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 3-ம் தேதி தேரோட்டம்

பங்குனி பெருவிழா - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 3-ம் தேதி தேரோட்டம்
Updated on
1 min read

சென்னை: பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 3-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. பின்னர் மறுநாள் அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் திருவீதி உலா நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஓரிரு நாட்களுக்கு முன்பு அறநிலையத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மார்ச் 27-ம் தேதி காலை, கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடும், இரவு 9 மணிக்கு நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகன திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதையடுத்து மார்ச் 28-ம் தேதி காலை கொடியேற்றம் நிகழ்வும், இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவில் காட்சி தருதல் நிகழ்வும், மார்ச் 30-ம் தேதி அதிகார நந்தி காட்சி தருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

மார்ச் 31-ம் தேதி வெள்ளி புருஷா மிருக வாகனம், வெள்ளி சிங்க வாகனம், புலி வாகனத்திலும், இரவில் நாக வாகனம், காமதேனு வாகனம், ஆடு வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 3-ம் தேதி நடக்கிறது.

அன்று காலை 6.30 மணிக்கு திருத்தேருக்கு சுவாமி எழுந்தளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, காலை 7.25 மணிக்கு தேரோட்டம் தொடங்கும். இதையடுத்து ஏப்ரல் 4-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் வெள்ளி விமானத்தில் சுவாமி வீதி உலா செல்வார்.

ஏப்ரல் 6-ம் தேதி இரவு 8 மணிக்கு திருகல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 8.30 மணிக்கு கொடியிறக்கம், சண்டேஸ்வரர் விழா நிறைவும் நடக்கிறது.

விழா நடைபெறும் 10 நாட்களிலும் பகல், இரவில் ஐந்திருமேனிகள் திருவீதி உலாவும், கபாலீஸ்வரர் கோயில் ஆஸ்தான சிறப்பு நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் மங்கள இசையும் நடைபெறும். அதேபோல், ஏப்ரல் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தினசரி விடையாற்றி சொற்பொழிவுகள் மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை நடைபெற உள்ளன. ஏப்ரல் 4 பிற்பகல்2.45 மணிக்கு அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் வெள்ளி விமானத்தில் சுவாமி வீதி உலா செல்வார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in