Last Updated : 28 Sep, 2017 12:11 PM

 

Published : 28 Sep 2017 12:11 PM
Last Updated : 28 Sep 2017 12:11 PM

செப் 30- விஜயதசமி: ஷிர்டி சாய்பாபா சமாதி தினம்-எடுத்துச்செல்லப்பட்ட விளக்கு

குரு தன் உடல் மரணமடைந்த பிறகும் சீடர்களிடம் தொடர்பில் இருப்பார் என்பது ரமண மகரிஷியின் வாக்கு. அவரது வாக்குக்குச் சாட்சியாக, மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு மூலையில் இருக்கும் ஷிர்டியில் தோன்றி 99 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்து போன ஷிர்டி சாய்பாபாவின் திருவுருவப் படமும் ஆலயங்களும் இந்தியா முழுவதும் இன்று நிறைந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களின் துயரங்களுக்கு நம்பிக்கையாக, குணமூட்டியாக அவர் நம்பி வழிபடப்படுகிறார். அவர் சமாதி அடைந்த பிறகும், அவர் இதயம் நகர்கிறது; அடைக்கலம் தேடி வருபவர்களிடம் உரையாடுகிறது. 1918-ம் ஆண்டு விஜயதசமி நாள் மதியம் 2.35-க்கு அவர் காலமானார். அவர் மகா சமாதியடைந்து 99 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ஷிர்டி சாய்பாபா, தனது சமாதியை தன் மறைவுக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் அதே விஜயதசமி நாளில் முன்னுணர்ந்துவிட்டார். அவர் சமாதியடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தனது பக்கீர் தோழர் ஒருவருக்கு அனுப்பிய செய்தியில், “அல்லா இங்கு வைத்த விளக்கை எடுத்துக்கொண்டு போகிறார் ” என்று கூறியிருந்தார். அதைப் படித்த பக்கீர், வந்திருக்கும் செய்தியின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொண்டு கண்ணீர்விட்டார்.

ராமன் கிருஷ்ணன் அனுமன்

ஷிர்டி சாய்பா இறந்த அதே தினத்தில் தான் மொஹர்ரம், புத்த ஜெயந்தி இரண்டும் அனுசரிக்கப்பட்டன. மதங்களைத் தாண்டி மனிதர்களை நேசிக்க வந்த ஷிர்டி சாய்பாபாவின் சமாதி இப்படி நிகழ்ந்தது பொருத்தமானதும்கூட.

மூன்று தலைகளையுடைய குரு தத்தாத்ரேய பகவானின் மறு அவதாரமாகக் கருதப்படும் ஷிர்டி சாய்பாபா, சிவன், கிருஷ்ணர் மற்றும் அனுமனின் பண்புகளைக் கொண்டவர். அவர் தனது 60 ஆண்டுகளையும் கழித்த துவாரகமயி சாவடியில் உள்ள ‘துனி’யில் அமர்ந்து சத்யவிரதத்தைப் பயின்றவர். சத்யம், சிவம், சுந்தரம் என்பதே அவரது கொள்கை. ராமனாக அவர் எளிய மனிதர்களுடனேயே வாழ்ந்து அவர்களுக்கு சேவைசெய்தவர். மத மாச்சரியங்களைக் கடந்து நின்றவர். காம, குரோத, லோப, மோகங்களைத் தவிர்ப்பதற்கான போதனைகளைக் கூறியவர். அவரது ‘சாய் சத்சரித்திரம்’ நூலில் அவர் சிக்கலான தத்துவங்கள் எதையும் கூறவில்லை. ஆனால் அவரது வாழ்க்கை மனிதநேயம் வெளிப்படும் அற்புதச் சம்பவங்களால் நிறைந்தது. அவர் மறைந்த பிறகும், “நான் இங்கே இருக்கையில் உனக்குப் பயமேன்” என்ற அவரது வாக்கியம் எத்தனையோ பேருக்கு சக்தி வாய்ந்ததாக உள்ளது.

சச்சிதானந்த சத்குரு

ஷிர்டி சாய்பாபாவின் மரணத்துக்குப் பிறகு, பக்த கபீரின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சையைப் போலவே எந்த நடைமுறையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட வேண்டுமென்று இந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் சர்ச்சை எழுந்தது. அதன் பிறகு, பாபாவின் விருப்பப்படி, துவாரகமயி அருகிலே உள்ள ‘புதி வாடா’வில் புதைக்கப்பட்டது. அதன்மேல்தான் ஷிர்டி சாய்பாபா, அழகிய உருவமாகப் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவருகிறார்.

அவர் உடல் மறைந்தாலும், அவர் உயிர்த்திருக்கும் தடயங்கள் பக்தர்களால் தொடர்ந்து உணரப்படுவதாக உள்ளது. தனது சமாதி பேசவும் அடைக்கலம் கோருவோரின் இடம் நோக்கி நகரவும்செய்யும் என்று கூறியதன் அடையாளங்கள் அவை. பாபாவின் ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் எலும்பிலிருந்தும் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் எல்லையற்ற அருளின் குரல் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ‘ஓம் ஸ்ரீ சாய்நாத் மகராஜ் கி ஜே’ என்று உலகமெங்கும் ஒலிக்கும் கோஷமே இதற்கு உதாரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x