Published : 18 Mar 2023 04:21 AM
Last Updated : 18 Mar 2023 04:21 AM
சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த இடத்தில் தேவஸ்தானம் சார்பில் ரூ.10 கோடி செலவில் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முதலாக சென்னையில்தான் பத்மாவதி தாயாருக்கு தனி கோயில் கட்டப்பட்டுள்ளது.
திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக, திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவார பாலகர்களான வனமாலி, பலாக்கினி சிலைகள், மூல விக்கிரகங்கள், கலசங்கள் ஆகியவை சென்னை தியாகராய நகருக்கு கொண்டு வரப்பட்டு, கடந்த 12-ம் தேதி முதல் சிறப்புபூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதில், பத்மாவதி தாயார் சிலை நான்கரை அடி உயரம், மூன்றரை அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவர்சிலைகளை நெல்லில் வைத்து,தண்ணீரிலும், 2 ஆயிரம் லிட்டர்பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயில் கர்ப்பக்கிரகத்தில் பத்மாவதி தாயார் சிலை கடந்த 16-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணி முதல் கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, ஆலய பிரதக்ஷனா ஆகிய பூஜைகள் நடந்தன. 7.35 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலின் விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ‘கோவிந்தா.. கோவிந்தா’ என்று முழக்கமிட்டபடி, ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர். பின்னர், அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மாடியில் இருந்தும், சாலை மேம்பாலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்வை காண, ஏராளமானோர் குவிந்ததால், ஜி.என்.செட்டி சாலையில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
பின்னர், காலை 10 மணிக்கு பத்மாவதி - ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 11 மணிக்கு பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தனர். தரிசனத்துக்காக கோயிலுக்கு வெளியிலும் திரளானோர் காத்திருந்தனர். அவர்களுக்காக, கும்பாபிஷேக நிகழ்வுகள் முழுவதும் கோயிலின் வெளியே வைக்கப்பட்டிருந்த ‘டிஜிட்டல் திரை’ மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இரவு 7.30 மணிக்கு ஜி.என்.செட்டி சாலை, வடக்கு போக் சாலை வழியாக தாயார் வீதிஉலா நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. சென்னையில் திடீரென பெய்த மழை காரணமாக, கோயில் வளாகத்திலேயே தாயார் உலா வந்து அருள்பாலித்தார்.
கும்பாபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பக்தர்களுக்காக கோயிலின் எதிரே இடம் ஒதுக்கப்பட்டு, இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு 3 வேளையும் சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், வெஜ் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
கும்பாபிஷேக நிகழ்வில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, செயல் அலுவலர் ஏ.வி.தர்மா ரெட்டி,தமிழகம் - புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் ரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடத்தின் பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீசுவாத் மனேந்திரா சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்தினருடன் வந்திருந்துபத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார். அறநிலையத் துறை செயலர் பி.சந்திரமோகன், வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, வி.ஜி.ராஜேந்திரன், வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி கே.கணேஷ், டாக்டர்கள் வெங்கடாசலம், தீரஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
தங்க நிறத்தில் மூலவர் விமானம்: கோயில் கருவறையில் வடக்குதிசை நோக்கி ஸ்ரீ பத்மாவதி தாயார் வீற்றிருக்கிறார். அவருக்கு காவலாக வனமாலி, பலாக்கினி உள்ளனர். தாயாரின் மூலவர் விமானம் தங்க நிறத்தில் பிரகாசிக்கிறது. கருவறையின் எதிரில் பலிபீடம் உள்ளது. தாயாரை தரிசித்துவிட்டு வெளியே வந்தால், பக்தர்கள் காணிக்கை செலுத்த இடதுபுறம் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் பகவத் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் உள்ளன.
கோயில் பின் பகுதியில் மடப்பள்ளி அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் 3 வேளையும் விதவிதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், பக்தர்கள் கோயிலில் அமர்ந்து தியானம் செய்ய இட வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கோயிலை பற்றி பக்தர்கள் அறிந்து கொள்ள தகவல் மைய நிர்வாக அலுவலகம் உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வண்ண மலர்களால் அலங்கரிப்பு: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மங்களாசாசனம் நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் நேரில் கலந்து கொள்ள முடியாத பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் யூடியூபில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஒட்டி இரவில் கோயில் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.
மேலும், வண்ண மலர்களால் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் உள்பிரகாரம் முழுவதும் வாழை, கரும்பு,இளநீர் தோரணம் கட்டப் பட்டிருந்தது. இதனை பார்த்தபோது திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவை போல் இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
மன்னர்கள் காலத்து அமைப்பு: சென்னை தியாகராய நகர் ஜி.என். செட்டி தெருவில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் மன்னர்கள் காலத்தில் புராதனக் கோயிலின் அமைப்பை போல கருங்கற்களால் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோயில் கட்டுமான பணியை 2 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். திருச்சானூரில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் மூலவர் சிலை செய்யப்பட்ட இடத்திலேயே தியாகராய நகர் பத்மாவதி தாயார், துவார பாலகர் சிலைகள், கோபுர கலசங்கள், உற்சவ விக்கிரகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலின் 6 கிரவுண்டு இடத்தில் 3 கிரவுண்டில் கோயிலும், மீதமுள்ள இடத்தில் மண்டபம், சிறிய புஷ்கரணி, மடப்பள்ளி, சுவாமி வாகனங்கள் வைக்கும் இடம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. வடக்கு திசையை நோக்கி கோயில் அமைந்துள்ளது. கோயில் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சின்ன புஷ்கரணி குளம் உள்ளது. அதன் அருகில் துவார பாலகேஷி அம்மன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் ராஜ கோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. இது பாஞ்சராத்ர ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தில் கலைநயமிக்க சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கோயிலின் ராஜ கோபுரம் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களின் ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி ரூ.1 கோடி நிதி வழங்கியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT