

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள சேதுமாதவத் தீர்த்தக் குளத்தில் உழவாரப் பணி நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலின் உள்ளே மகாலட்சுமி தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், கங்கா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், யமுனா தீர்த்தம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், சக்கர தீர்த்தம், சர்வ தீர்த்தம், சேது மாதவத் தீர்த்தம், சிவ தீர்த்தம், நள தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், நீல தீர்த்தம், சூரிய தீர்த்தம் உட்பட 22 புனித தீர்த்தங்கள் அமைந்துள் ளன.
இந்த 21 தீர்த்தங்கள் கிணறு வடிவிலும், சேதுமாதவ தீர்த்தம் மட்டும் குளம் வடிவிலும் உள்ளன. 2015-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக திருப்பணிகளின் போது சேதுமாதவத் தீர்த்தக் குளம் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டது.
அதன் பிறகு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாததால் தாமரைச் செடிகள் அதிகம் வளர்ந்தும், சகதிகள் நிரம்பியும் மாசடைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஒரு வார காலமாக கோயில் ஊழியர்கள், சேதுமாதவ தீர்த்தக் குளத்தில் பரவலாக வளர்ந்திருந்த தாமரைச் செடிகள், கழிவு மணல், குளக்கரையின் படிகளில் வளர்ந்திருந்த புற்கள், பாசிகளை அகற்றி சுத்தம் செய்து, உழவாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.