

இ
ரண்டு நோயாளிகள் ஒரு மருத்துவமனையின் அறையில் தங்கவைக்கப்பட்டனர். அதில் ஒருவருக்கு நுரையீரலில் இருந்து கோழையை வெளியேற்றுவதற்காகத் தினமும் மதியம் ஒரு மணிநேரம் படுக்கையில் எழுந்து உட்கார அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த நோயாளியின் கட்டிலுக்குச் சற்று மேலே ஒரு ஜன்னல் இருந்தது.
இன்னொரு நோயாளி எழுந்து உட்காரக்கூட முடியாமல் படுத்த படுக்கையாய்க் கிடந்தார்.
நோயாளிகள் இருவரும் தங்கள் மனைவி, குடும்பம், வீடு, வேலை, ராணுவ சேவை, உல்லாசங்கள், சுற்றுலா சென்ற ஊர்கள் பற்றியெல்லாம் மணிக்கணக்காகப் பேசிப் பொழுதைக் கழித்தனர். ஜன்னலை ஒட்டிப் படுத்திருந்த நோயாளி தினமும் எழுந்து அமரும்போது ஜன்னல் வழியாகக் காணும் காட்சிகளை சகநோயாளியிடம் வர்ணிப்பார். அதைக் கேட்டவருக்கு வண்ணம் ததும்பும் காட்சிகளாக விரிந்தது. தினமும் அந்த ஒரு மணி நேரத்துக்காகவே வாழத் தொடங்கினார் இன்னொருவர்.
ஜன்னலிலிருந்து பார்க்கும்போது அழகிய ஏரியோடு கூடிய பூங்கா ஒன்று தென்பட்டது. அதில் வாத்துகளும் அன்னப் பறவைகளும் நீந்திச் சென்றன. சிறுவர்கள் தங்கள் காகிதக் கப்பல்களை அங்கே மிதக்கவிட்டனர். காதலர்கள் பூக்களினூடாகக் கைகோத்து நடந்தனர். ஓங்கி உயர்ந்த மரங்கள் அந்நிலக்காட்சியை எழிலாக்கின. துாரத் தொடுவான விளிம்பில் நகரம் தெரிந்தது. இந்த அழகு கொழிக்கும் காட்சிகளை ஜன்னலோர நோயாளி விவரிக்கும்போது, மற்றவர் அதையெல்லாம் தன் மனதில் ஓட்டிப் பார்ப்பார்.
ஒரு கதகதப்பான மதிய வேளையில் ஓரு ராணுவ அணிவகுப்பை ஜன்னல் அருகில் இருந்தவர் வர்ணி்த்துக் கொண்டிருந்தார். அணிவகுப்பின் ஆரவாரம் இன்னோரு நோயாளியின் காதுகளை எட்டாவிட்டாலும், மனக்கண்ணால் அதைக் கண்டார். ஆனால், அக்காட்சிகள் தன் பார்வைக்கு எட்டாததால் ஜன்னலுக்கு அருகே இருந்த நோயாளியைப் பார்த்து பொறாமைப்பட்டார் இன்னொருவர். இந்த எண்ணம் நாளடைவில் பெருகி அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. அதனால் தூக்கம் தொலைந்து போனது.
ஒரு பின்னிரவில் இன்னொருவர் உத்திரத்தைப் பார்த்தபடி துாக்கமின்றி கிடந்தபோது, ஜன்னல் படுக்கை நோயாளி இருமத் தொடங்கினார். இருமல் அதிகமாகி மூச்சுவிட சிரமப்பட்டார். மங்கிய ஒளியில் உதவிக்காக தன் கைகளை நீட்டித் துழாவினார். இன்னொருவரோ அந்தக் காட்சியைத் தன் படுக்கையிலிருந்து சத்தம் காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். உதவிக்கு யாரையும் அழைக்கவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் ஜன்னல் படுக்கை நோயாளி மூச்சுத் திணறி இறந்துபோனார். இரவு மௌனமாய் கடந்தது.
மறுநாள் காலை செவிலி வந்தபோது, அவர் இறந்து கிடப்பதைப் பார்த்து வருத்தப்பட்டாள். அவரது சடலம் அகற்றப்பட்டது. இன்னோருவர் செவிலியிடம் தன்னை அடுத்தக் கட்டிலுக்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டார். செவிலி சந்தோஷமாக அவரை இடம் மாற்றி விட்டு அந்த அறையைவிட்டுப் போனாள். நோயாளி மிகவும் சிரமப்பட்டு தன் முழங்கைகளை ஊன்றி முதல்முதலாக அந்த ஜன்னல் வழி பார்க்கத் தலைதூக்கினார்.
அங்கே ஒரு நெடிய வெள்ளைச் சுவர் மட்டுமே இருந்தது.
இன்னொருவர் அதிர்ச்சியடைந்தார். உடலைச் சுத்தம் செய்ய மாலை வந்த செவிலியிடம் இறந்தவரைப் பற்றிக் கேட்டார். அவர் பார்வையற்றவர் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் செவிலி கூறினாள்.