

திருமலை: திருமலையில் பக்தர்களுக்கு மாதத்தில் இனி ஒருமுறை மட்டுமே தங்கும் அறை ஒதுக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்.
இதுகுறித்து தர்மா ரெட்டி நேற்று திருமலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலையில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தங்கும் அறைகள் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பக்தர்களின் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. இந்த முறையால் தங்கும் அறைகள் பெறுவதிலும் அறையை காலி செய்யும்போது அதற்கான டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதிலும் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனி வரும் நாட்களில் முகத்தை ஸ்கேன் செய்யும் திட்டமே அமல்படுத்தப்படும். இதனால் இடைத்தரகர்கள் பிரச்சினை இருக்காது.
கடந்த 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ. 2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதே முறைதான் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவிலும் கடைப்பிடிக்கப்படும். இனி ஒரு பக்தருக்கு மாதத்தில் ஒருமுறை மட்டுமே திருமலையில் அறை ஒதுக்கப்படும். வைகுண்டம் 2-ல், பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறையும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. எனவே இத்திட்டமும் இனி தொடரும். இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.
முன்னதாக நடைபெற்ற தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் எஸ்விபிசி தேவஸ்தான சேனலின் தலைமை செயல்அதிகாரி ஷண்முக குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.