

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று தொடங்கிய பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை பூச்சொரிதல் விழா விமரிசையாக நடக்கும். அதன்படி, இக்கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி காலை 7 மணிக்கு கோயில் கொடிமரம் அருகே விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பூத்தட்டுக்களை யானை மீது வைத்தும், கோயில் ஊழியர்கள் பூத்தட்டுகளை சுமந்தும் தேரோடும் வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு காப்புகட்டுதல் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்துள்ளனர். நேற்று இரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது.
இரவு 9 மணி முதல் விடிய, விடிய பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களைக் கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபாடு செய்தனர். பங்குனி மாத கடைசி வரை ஞாயிற்றுகிழமைகளில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும்.
இத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்களும், தீவினைகளும் அணுகாமல் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்களுக்கு சமயபுரம் மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். அதன்படி, நேற்று முதல் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் தொடங்கினார்.
இந்த 28 நாட்களிலும் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர் ஆகியவை மட்டுமே நைவேத்தியமாக படையல் செய்யப்படும்.
விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்துள்ளனர்.