

பகவான் வர்த்தமான மகாவீரர் தனது பயணத்தின்போது ஒரு பெரிய மரத்தடியில் தியானம் செய்ய ஆரம்பித்தார். அந்நேரத்தில் ஒரு மேய்ப்பன் தன் மாடுகளை ஓட்டிவந்தான். அவன் மகாவீரரிடம், மாடுகளைப் பார்க்கச் சொல்லிவிட்டுப் போனான். ஆழ்ந்த தியானத்திலிருந்த மகாவீரர் அவனையோ மாடுகளையோ அவன் சொன்ன வார்த்தைகளையோ கவனிக்கவில்லை.
இதற்கிடையில் மாடுகள் தம் விருப்பப்படி மேய்வதற்கு சென்று விட்டன. பின்னர் மாட்டுக்காரன் திரும்பி வந்தான்.ஆனால் அங்கு மாடுகள் இல்லை. அவன் மகாவீரரிடம், மாடுகள் எங்கே என்று கேட்டான். தியானத்திலேயே இருந்த பகவான் ஏதும் சொல்லவில்லை. மாட்டுக்காரன் காடு முழுவதும் தன் மாடுகளைத் தேடினான். அவன் தேடச் சென்றதும், அம்மாடுகள் தாமாகவே மகாவீரர் தியானம் செய்யும் இடத்திற்கு வந்துவிட்டன
காட்டிற்குள் சென்று மாடுகளைத் தேடிய மேய்ப்பன் மறுபடி பகவான் தியானத்திலிருந்த இடத்திற்கே வந்தான். அனைத்து மாடுகளும் அங்கு இருப்பதைக் கண்டான். மகாவீரர் தொடர்ந்து தியானத்தில் இருந்தார். மகாவீரர்தான் தன் மாடுகளை ஒளித்து வைத்திருந்தார் என்று தவறாக எண்ணியவன் கோபம் கொண்டு பகவானை மாட்டுக் கயிற்றால் தாக்க கையை ஓங்கினான். உடனே ஒரு தேவதை தோன்றி அந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டது.
மாட்டுக்காரனிடம், “பகவான் ஆழ்ந்த தியானத்தில் உள்ளதை நீ கவனிக்கவில்லையா?”என்று கேட்டது. அதற்கு அவன், மகாவீரர் தன்னை ஏமாற்றப் பார்ப்பதாகக் கூறினான்.
தேவதை மகாவீரரின் மேன்மை பற்றிக் கூறியது.
மாடு மேய்பவன் தன் தவறை உணர்ந்து பகவான் மகாவீரரிடம் மன்னிப்பு கேட்டுச் சென்றான்.தேவதையும் தான் பகவானின் துயரத்தை தடுத்ததை எண்ணி மகிழ்ந்தது.