மாசிமகத்தை ஒட்டி கும்பகோணத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேர்த்திருவிழா - நாளை மகாமக குளத்தில் தீர்த்தவாரி

மாசிமகத்தை ஒட்டி கும்பகோணத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேர்த்திருவிழா - நாளை மகாமக குளத்தில் தீர்த்தவாரி
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற 4 கோயில்கள் தேரோட்டத்தில் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர்.

கும்பகோணத்தில் 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும். ஆண்டுதோறும் மாசி மக விழாவும் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு மாசி மக விழா 6 சிவன் கோயில்களில் கடந்த 25-ம் தேதியும், 3 பெருமாள் கோயில்களில் கடந்த 26-ம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்கின. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் விநாயகர், முருகன், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இன்று மாலை சண்டிகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய 4 கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி, மகாமக குளத்தில் நாளை நடைபெறுவதை யொட்டி, இவ்விழாவில் தொடர்புடைய 12 சிவன் கோயில்களிலிருந்து காலை 10 மணிக்கு சுவாமிகள் புறப்பட்டு மகாமக குளத்தைச் சுற்றி வலம் வந்து கரையில் நிறுத்தப்படுவர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 12.45 மணிக்குள் குளத்தில் அஸ்ரத்தேவருக்கு அபிஷேகமும் தீர்த்தவாரியும் நடைபெறும். மேலும், நாளை காலை 9 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதி வராகப் பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களின் தேரோட்டமும் நடைபெறும். பின்னர், சாரங்கபாணி கோயில் பொற்றாமரைக் குளத்தில் நாளை தெப்போற்சவம் நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in