

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மலையே மகேசன்’ என பக்தர்களால் போற்றப்படும் திருவண்ணாமலையில், பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று, அண்ணாமலையாரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
லட்சக்கணக்கான பக்தர்கள்: இதன்படி, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் 14 கி.மீ. சுற்றளவு கொண்ட மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, வழிபடுகின்றனர். மாசி மாதத்துக்கான பவுர்ணமி நாளை (மார்ச் 6) மாலை 5.39 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் (மார்ச் 7) இரவு 7.14 மணிக்கு நிறைவு பெறுகிறது.
மேற்கண்ட நேரம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவுர்ணமி கிரிவலத்தை யொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், வெளி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.