கும்பகோணம்: 18 ஆண்டுகளுக்கு பிறகு 8-ம் படித்துறைக்கு சென்ற சமேத ஆதிகும்பேஸ்வரர்!

கும்பகோணம்: 18 ஆண்டுகளுக்கு பிறகு 8-ம் படித்துறைக்கு சென்ற சமேத ஆதிகும்பேஸ்வரர்!
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் மங்களாம்பிகையம்மன் சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமிகள் மாசி மகத்தை யொட்டி 18-ஆண்டுகளுக்கு பிறகு 8-ம் படித்துறைக்கு சென்றார்.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மகத்தை யொட்டி கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி நாள் வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா புறப்பட்டு சென்று வருகிறது. இந்நிலையில், இந்த விழாவின் 7-ம் நாளில் கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள 8-ம் படித்துறைக்கு மங்களாம்பிகையம்மன் சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமிகள் செல்வது வழக்கம். ஆனால், அந்த படித்துறை சிதிலமடைந்ததால், கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு அதன் அருகிலுள்ள ஒருவரது வீட்டிற்கு சுவாமிகளை, அங்கு கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த திருவேங்கடம், அண்மையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வீட்டில் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால், புனிதத் தன்மையைக் கெடுவதாகவும், வழக்கப்படி நடத்த உத்தர விட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம், இந்த ஆண்டும், இனிவரும் காலங்களிலும் தனியார் மண்டபம் மற்றும் பிற இடங்களில் சுவாமியை இறக்கி அபிஷேக, ஆராதனைகள் செய்யக் கூடாது என உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 7-ம் நாளான இன்று காலை மங்களாம்பிகையம்மன் சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமிகள் கோயிலிருந்து புறப்பட்டு வீதியுலாவாக 8-ம் படித்துறைக்கு சென்றனர். அங்கு 21 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேக செய்யப்பட்டது. பின்னர் மாலை சுவாமிகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மங்களாம்பிகையம்மன் பல்லக்கிலும், ஆதிகும்பேஸ்வரர் குதிரை வாகனத்தில் வீதியுலாவாக கோயிலை வந்தடைந்தது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுவாமிகள் 8-ம் படித்துறைக்கு வருவதையறிந்து ஏராளமான பக்தர்கள் அங்குச் சென்று சுவாமிகளை தரிசனம் செய்தனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். .

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in