

உஜ்ஜயினி: மகா சிவராத்திரியை முன்னிட்டு, உஜ்ஜயினி மகாகாலேஸ்வர் கோயிலில் நேற்று 21 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய சாதனை படைக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் கோயில் உள்ளது. 12 ஜோதிர்லிங்க கோயில்களில் இதுவும் ஒன்று ஆகும். அங்கு மகாசிவராத்திரி விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. 5 லட்சத்தும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று கோயிலுக்கு வருகை தந்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக உஜ்ஜயினி மாவட்ட ஆட்சியர் குமார் புருஷோத்தம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இவ்விழாவை முன்னிட்டு 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 5 ஆயிரம் வாகனங்களை நிறுத்த 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. வாகன நிறுத்தும் இடத்திலிருந்து பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்காக 100 பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டன.
சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஷிப்ரா நதிக்கரையில் 21 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதில், 18 லட்சம் விளக்குகள் ஒரே நேரத்தில் எரிந்தன. இது புதிய கின்னஸ் உலக சாதனையாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தும் பணியில் 22 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனால் சுற்றுச்சுழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதற்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு 15.76 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதுதான் இப்போது வரை சாதனையாக இருந்தது. இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.