குமரியில் சிவராத்திரி தரிசனம்: 108 கி.மீ. தூரம் ஓடியே சென்று வழிபடும் பன்னிரு சிவாலய ஓட்டம் துவங்கியது

குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டம்  முஞ்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து துவங்கியது. கோயில் அடிவாரத்தில் உள்ள சாலையில் இருந்து கோவிந்தா... கோபாலா... கோஷம் முழங்கி ஓடிச்செல்லும் பக்தர்கள்.
குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டம் முஞ்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து துவங்கியது. கோயில் அடிவாரத்தில் உள்ள சாலையில் இருந்து கோவிந்தா... கோபாலா... கோஷம் முழங்கி ஓடிச்செல்லும் பக்தர்கள்.
Updated on
2 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரியமிக்க பன்னிரு சிவாலய ஓட்டம் வெள்ளிக்கிழமை துவங்கியது. சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தமிழகம், மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று நேர்த்திகடன் செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு திருவிதாங்கூர் மன்னர் காலம் தொட்டே வேறெங்கும் இல்லாத பன்னிருசிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் விரதம் இருந்து 12 சிவாலயங்களை ஓடியே சென்று வழிபடும் முறை உள்ளது. சிவராத்திரிக்கு முந்தைய தினமான இன்று அதிகாலையிலேயே முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயில் முன்பிருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை துவங்கினர். கையில் விசிறி, தோளில் விபூதியுடன் கூடிய கைப்பையுடன் காவி உடைதரித்த பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷம் முழங்க கோயிலை சுற்றி ஓட்டத்தை துவங்கி பின்னர் கோயில் படியில் இறங்கி சாலையோரமாக ஓடினர்.

மொத்தம் 108 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த 12 கோயில்களிலும் 24 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்யும் வகையில் இந்த நேர்த்திகடன் வழிபாடு உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் இன்று கடந்த இரு ஆண்டுகளை விட அதிகமான பக்தர்கள் ஓட்டத்தில் பங்கேற்றனர். இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் மட்டுமின்றி பெண் பக்தர்களும் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர். சிவாலய ஓட்டத்துடன் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் மற்றும் பிற வாகனங்களிலும் பக்தர்கள் இந்த பன்னிரு சிவாலயஓட்ட புனித பயணத்தை மேற்கொண்டனர்.உலகில் வேறெங்கும் இல்லாத இந்த வழிபாட்டு முறையை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என இன்று சிவாலய ஓட்டத்தை துவங்கிய பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டத்தை துவங்கிய சிவ பக்தர்கள்திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை திப்பிலான்குடி மகாதேவர் கோயில், பன்னிபாகம் மகாதேவர் கோயிலில் இன்று இரவு ஓட்டத்தை முடிக்கின்றனர். பின்னர் இரவு கோயிலில் தங்கி ஓய்வெடுக்கும் பக்தர்கள் சிவராத்திரியான நாளை ஓட்டத்தை துவங்குகின்றனர். அவர்கள் கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு மகாதேவர் கோயில்,திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருவிடைகோடு மகாதேவர் கோயில், திருபன்னிகோடு மகாதேவர் கோயிலில் வழியாகதிருநட்டாலம் சங்கரநாராயணம் கோயிலில் சிவாலய ஓட்டத்தை இரவில் நிறைவு செய்கின்றனர். பின்னர் அங்கு சிவராத்திரி பூஜைகளில் பங்கேற்று நாளை இரவு முழுவதும் கண்விழித்து விடிய விடிய சிவனை தரிசனம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

சிவாலயங்களை தரிசிக்க மார்த்தாண்டம் சாலையில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பக்தர்.
சிவாலயங்களை தரிசிக்க மார்த்தாண்டம் சாலையில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பக்தர்.

சிவாலய ஓட்டத்துடன் வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அதிகமானோர் காணப்பட்டனர். இன்று மாலையில் இருந்து கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பன்னிரு சிவாலயங்களையும் வாகனங்களில் சென்று வழிப்பட்டனர்.சிவாலய ஓட்டத்தை முன்னகிட்டு ஓட்டம் நடைபெறும் வழித்தடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் ஓடும் சிவ பக்தர்களுக்கு இளநீர், நுங்கு, மோர் உட்பட குளிர் பானங்களை வழங்க பக்தர்கள் அமைப்பினர் ஏராளமானோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

சிவராத்திரியை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் சிவாலய ஓட்டம் செல்லும் வழிப்பாதை எங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் சென்றுவர வசதியாக அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் ரூ.300 கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்படுகிறது. மார்த்தாண்டம் பேரூந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணி முதல் இந்த பேரூந்துகள் புறப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in