

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் துணை ஆணையர் ஆ.அருணாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மீனாட்சியம்மன் கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி பிப்.18-ம் தேதி இரவு முதல் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை பிப்.19-ம் தேதி அதிகாலை வரை நடைபெறும். அம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சந்நிதிகளில் விடிய, விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் நடை பெறும்.
பக்தர்களும், சேவார்த்திகளும் பால், தயிர், இளநீர், பன்னீர் பழ வகைகள் தேன், மஞ்சள் பொடி, எண்ணெய் நெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை பிப்.18-ம் தேதி மாலைக்குள் கோயிலில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். முதல் கால பூஜை இரவு 10 மணிக்குத் தொடங்கி நான்கு கால பூஜைகள் முடிந்து அர்த்த ஜாம பூஜை, பள்ளியறை பூஜை, திருவனந்தல் பூஜை அதிகாலை 5 மணி வரை நடைபெறும்.
அதேபோல், மீனாட்சி கோயிலுக்கு உட்பட்ட திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயில், ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரர் கோயில், சிம்மக்கல் ஆதி சொக்க நாதர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், தெற்கு மாசி வீதி தென் திருவாலவாய சுவாமி கோயில்,
எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோயில், பேச்சியம்மன் படித்துறை காசி விஸ்வநாதர் கோயில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேஸ்வரர் கோயில் ஆகிய தலங்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.