

திருப்பதி: ஆன்மீக நகரமாக விளங்கும் திருப்பதியில் புகழ்பெற்ற கபிலேஸ்வரர் கோயில் உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சைவ திருத்தலத்தில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தேறின. இதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் சப்பரத்தில் திருவீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதேபோன்று, திருப்பதி தேவஸ்தானத்தினரின் ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் நேற்று பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது.
கோயில் கொடிக்கம்பத்தில் நேற்று காலை கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓதவைகானச ஆகம முறைப்படி பிரம்மோற்சவம் தொடங்கியது. நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் வெங்கடேச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 9 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவத்தில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.