Last Updated : 06 Feb, 2023 05:55 PM

 

Published : 06 Feb 2023 05:55 PM
Last Updated : 06 Feb 2023 05:55 PM

தக்கலை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழாவில் ஞானப் புகழ்ச்சி பாடுதல்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தக்கலை செய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழாவில் ஞானப்புகழ்ச்சி பாடும் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது.

நாகர்கோவில்: தக்கலை பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவில் ஞானப் புகழ்ச்சி பாடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிரசித்திபெற்ற அற்புதங்கள் செய்த ஞானமாமேதை பீர்முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த ஜனவரி 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா, மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 4-ம் தேதி வரை மார்க்க பேருரைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவர்கள் கனிவகைகளை நேர்ச்சையாக வழங்கினர்.

8-ம் தேதி வரைவிழா நடைபெறுகிறது. விழாவில் மார்க்க பேருரை மற்றும் நேர்ச்சை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று இரவு தொடங்கியது. இதையொட்டி மக்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, கோவை, சென்னை, மதுரை உட்பட தமிழக முழுவதும் இருந்தும், கேரளாவை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஞானப்புகழ்ச்சியில் பீரப்பாவின் புகழை கூறும் பாடல்கள் விடிய விடிய பாடப்பட்டது. ஞானப் புகழ்ச்சி பாடியவர்கள் பாரம்பரிய முறைப்படி ஆசாரிமார்கள் வழங்கிய பாலை பருகினர்.ஞானப் புகழ்ச்சி பாடல் இன்று அதிகாலையில் முடிவடைந்தது.

பீரப்பா சாகிபு ஞானப்புகழ்ச்சி பாடலையொட்டி இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால் குளச்சல், கோட்டாறு, தேங்காய்பட்டணம், சுவாமியார்மடம், திருவிதாங்கோடு, களியக்காவிளை, கொல்லங்கோடு, திட்டுவிளை, குலசேகரம் மற்றும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சாதி, மத பேதமின்றி ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

தக்கலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை பொது நேர்ச்சை நடைபெற்றது. 8-ம் தேதி இரவு 8 மணிக்கு சியாரத் நேர்ச்சை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x