

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் நேற்று நடந்த தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘அரோகரா’ கோஷத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான சென்னிமலை முருகன் கோயிலில், தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்லக்கு சேவை, மயில் வாகனக் காட்சி உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம் இரவு, சென்னிமலை கைலாசநாதர் கோயிலில், வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு அபிஷேகம் மற்றும் வசந்த திருக்கல்யாணம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு மேல் கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, சப்பரத்தில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள், சிறப்பு பூஜைக்குப்பின் தேரில் அமர வைக்கப்பட்டனர். காலை 6.15 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா’ கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்ட தேர் மாலை மீண்டும் வடம் பிடிக்கப்பட்டு, வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. இன்று (6-ம் தேதி) மாலை தேர் நிலை சேர்கிறது. வரும் 9-ம் தேதி இரவு 7 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் மகா தரிசனம் நடைபெறுகிறது.
திருவிழாவில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், அறநிலையத் துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோயில் செயல் அலுவலர் சரவணன், சென்னிமலை பேரூராட்சி தலைவர் தேவி அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, ஈரோடு திண்டல், பவானி உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. வரும் 9-ம் தேதி இரவு 7 மணிக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் மகா தரிசனம் நடைபெறுகிறது.