

பழநி: பழநி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. `அரோகரா, முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் வீதி உலா வந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியானில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, காலை 11 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு விநாயகர் மற்றும் வீரபாகு சுவாமி தேர்கள் முன் செல்ல வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரை ‘அரோகரோ’ முழக்கத்துடன் நான்கு ரத வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜசேகரன், சுப்பிரமணி, மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்க்கால் பார்த்தல்: விரதம் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தேரில் வலம் வந்த வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தனர். தேர் நிலையை அடைந்தவுடன் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் நிறைவாக பிப்.7-ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.