Published : 26 Jan 2023 06:34 AM
Last Updated : 26 Jan 2023 06:34 AM

பழநி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பு

பழநி: பழநி தண்டாயுதபாணி கோயிலில் நாளை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில், ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பின் தற்போது கோயிலில் திருப்பணிகள் தொடங்கி நிறைவடைந்து நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக யாகசாலையில் வேள்வி பூஜைகள் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று படி பாதைகளில் உள்ள உப கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

நாளை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் மலைக்கோயிலில் உள்ள ராஜகோபுரம், தங்க விமானத்துக்கு பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தின்போது மலைக் கோயிலில் 6,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதற்காக, ஒவ்வொருவருக்கும் தனியாக அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்குப் பின் தரிசனம் செய்யும் பக்தர்கள் மலைக்கோயிலை விட்டு கீழே இறங்கியதும் மற்ற பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவரது மனைவி துர்கா, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, மருமகன் சபரீசன் குடும்பத்தினர், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்பதாக கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதேபோல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட சில மத்திய அமைச்சர்களும், எம்பி.க்கள் வேலுச்சாமி, ஜோதிமணி, எம்எல்ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தேன்மொழி உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

கும்பாபிஷேக நாளில் பக்தர்களின் நெருக்கடி, பாதுகாப்பு கெடுபிடிகளைத் தவிர்க்கும் வகையில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து பிறகு மாலைக்குள் ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

3,000 போலீஸார் பாதுகாப்பு

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2 ஐஜி, 2 டிஐஜி, 7 மாவட்ட எஸ்.பி.கள், 14 ஏடிஎஸ்பி.கள், 25 டிஎஸ்பி.கள் உட்பட மொத்தம் 3,000 போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர். 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 50 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, 20 ‘ட்ரோன்’ கேமராக்கள் மூலம் மலைக்கோயிலை சுற்றி கண்காணிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகம், தைப் பூசத்தை முன்னிட்டு பழநி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x