Published : 23 Jan 2023 04:45 AM
Last Updated : 23 Jan 2023 04:45 AM

திருக்கடையூர் கோயிலில் அபிராமி பட்டர் விழா: தருமபுரம் ஆதீனம் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருக்கடையூர் கோயிலில் நடைபெற்ற அபிராமி பட்டர் விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ல கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்.

மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமி பட்டர் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வர் கோயிலில் உள்ள அபிராமி அம்மன் மீது மிகுந்த பக்திகொண்ட அபிராமி பட்டர் நாள்தோறும் அம்மன் முன்னிலையில் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னர், தை அமாவாசை நாளன்று காவிரி பூம்பட்டினம் சென்று கடலில் நீராடிவிட்டு, இறைவனை வழிபட திருக்கடையூர் வந்தார்.

அப்போது, மன்னரை கவனிக்காமல் அம்மன் சன்னதியில் தியானம் செய்துகொண்டிருந்த அபிராமி பட்டரின் முக ஒளியைக் கண்டு, இவர் யார் எனக் கேட்டார். அருகிலிருந்தவர்கள் இவர் வாமமார்கத்தவர், மது மயக்கத்தால் மயங்கி இருக்கிறார் என்று கூற, மன்னர் அதை நம்பவில்லை. முழு அமாவாசை நாளான அன்று, அபிராமி பட்டரிடம் ‘இன்று என்ன திதி' என மன்னர் கேட்டார்.

அம்மனின் மதிமுக ஒளியில் திளைத்திருந்த அபிராமி பட்டர், ‘பவுர்ணமி திதி' என்று பதிலளித்தார். அதைக் கேட்டு அதிர்ந்த மன்னர், “இன்று மாலை 6 மணிக்கு முழு நிலவு வானத்தில் சுடர் விடவேண்டும், இல்லையேல் அரசு உம்மை தண்டிக்கும்” என்றார். தியானம் கலைந்தவுடன் அபிராமி பட்டர் தாம் கூறியது தவறு என உணர்ந்து, அபிராமி அம்மனை வணங்கி பாடத் தொடங்கினார்.

அப்பாடல்களே அபிராமி அந்தாதி என அழைக்கப்படுகிறது. 79-வது பாடலை பாடும்போது, பக்தனின் கூற்றை மெய்ப்பிக்க அம்மன் தனது காதணியைக் கழற்றி வானில் வீசி அமாவாசை நாளில் முழு நிலவை தோன்றச் செய்தார். இந்த புராண நிகழ்வை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில் இக்கோயிலில் அபிராமி பட்டர் விழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. இரவு நடைபெற்ற அபிராமி பட்டர் விழாவின்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதியின் பாடல்களை பாடினர். 79-வது பாடல் பாடப்பட்டபோது, கோயில் பிரகாரத்தில் உள்ள விளக்குகள் அணைக்கப்பட்டு, நிலவு போன்ற ஒளி, விளக்கு மூலம் பக்தர்களுக்கு காட்சி அளிக்கப்பட்டது.

விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ல கயிலை மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசி வழங்கினார். இதில், பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு இறைவனை தரிசித்தனர்.

முன்னதாக நேற்று முன் தினம் மாலை, அபிராமி அம்மன் சேவைக்குழு ஏற்பாட்டில், தை அமாவாசை நாளில் தொடர்ந்து 15-வது ஆண்டாக பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது. யானை குளக்கரையில் அமைந்துள்ள எதிர்காளீசுவரர் கோயிலிலிருந்து ஏராளமான பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை சுமந்துகொண்டு, அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x