

என்றென்றும் உனக்கு தொண்டு புரிவோம்!
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய்!
விளக்கவுரை:
மிக அதிகாலையில் வந்து, வழிபட்டு,
உன் பொன்மயமான கமல மலர் பாதங்களைப் போற்றுவதன் பலனைக் கேட்பாயாக!
பசுக்களை வயிறு நிறையும்படி மேய்த்த பின்பே,
உண்கின்ற இடையர் குலத்தில் பிறந்த நீ,
உன்னுடைய ஏவலுக்கு இணங்க நாங்கள் செய்யும்
சிறு அந்தரங்கத் தொண்டுகளை அங்கீகரித்து ஏற்காமல் போகக் கூடாது!
இன்று நாங்கள் வந்தது பறை வாத்தியத்தைப் பெறுவதற்கு அன்று!
எங்களுக்கு எப்போதும் எந்த பிறவியிலும் உன்னையே எல்லா உறவுமாகக் கொண்டு
நீ உகக்கும்படியாக உனக்கே அடிமை செய்ய வேண்டும்!
செய்யும்போது குறுக்கிடும் ஆசைகளை மாற்றி
உனக்கே பணி செய்யப் பணித்து விடு, கோவிந்தா!
(உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருட்கள் மீது இச்சை ஏற்படாமல் காப்பாயாக!)
இதையும் அறிவோம்:
திருமாலின் அனைத்து தேவியரிலும் ‘பாடவல்ல நாச்சியார்’ என்று பெயர் பெற்றவள் ஆண்டாள் மட்டுமே. பெருமாளின் திருப்பெயர்களை உச்சரித்தலின் (நாம சங்கீர்த்தனம்) மகிமையை ஆண்டாள் 30 பாசுரங்களில் பல இடங்களில் குறிப்பிடுகிறாள். ‘பையத் துயின்ற பரமனடி பாடி’, ‘உத்தமன் பேர்பாடி’ ‘வாயினால் பாடி’ … என்று ஆய்ப்‘பாடி’ பெண்ணாக நம்மைப் போன்றவர்களை எழுப்பி அதன் மகிமையை நமக்கு கூறப் ‘பாடு’ படுகிறாள்!
- சுஜாதா தேசிகன்