

சென்னை: ‘இந்து தமிழ் திசை’யின் ‘ஆனந்த ஜோதி’ மற்றும் சைக்கிள் பிராண்டுஅகர்பத்தி சார்பில் 4-வது திருவிளக்கு பூஜை, திருக்கழுக்குன்றம் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் கோயிலில் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
‘இந்து தமிழ் திசை’யின் ‘ஆனந்தஜோதி’ சார்பில் உலக நன்மைக்காக வாழ்வை வளமாக்கும் திருவிளக்கு பூஜை நடத்த முடிவு செய்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ‘இந்து தமிழ் திசை’யின் ‘ஆனந்த ஜோதி’ - சைக்கிள் பிராண்டு அகர்பத்தி சார்பில் முதல் திருவிளக்கு பூஜை,தஞ்சாவூர் திருக்கண்டியூர் ஸ்ரீபிரம்மசிரகண்டீஸ்வரர் கோயிலில் கடந்த டிச.20-ம் தேதி நடத்தப்பட்டது. அடுத்து டிச.27-ம் தேதி திருவாரூர் மாவட்டம் பூவனூர் ஸ்ரீசதுரங்கவல்லபநாதர் - ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயிலிலும், ஜன.3-ம் தேதி பட்டுக்கோட்டை அடுத்த பாலத்தளி துர்க்கையம்மன் கோயிலிலும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், 4-வது திருவிளக்கு பூஜை செங்கல்பட்டு அடுத்த திருக்கழுக்குன்றம் ஆலயத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் சந்நிதியில் கடந்த 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையை, ஆலயத்தின் வேதாத்திரி சிவாச்சார்யார் நடத்திவைத்தார். ஓதுவார் மகாதேவன் பாடிப் பரவசப்படுத்தினார். நிகழ்ச்சி உபயதாரராக இருந்து, பூஜைக்கான பொருட்களை அன்புச்செழியன் வழங்கினார். இதில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்திவேல், அலுவலக ஊழியர் விஜயன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வி.ராம்ஜி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் விற்பனை பிரிவு, விளம்பரப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், சைக்கிள் பிராண்டு அகர்பத்தி சீனியர் விற்பனை அதிகாரி செல்வம், விற்பனை அதிகாரி மணிகண்டன், விற்பனை பிரதிநிதி யோகேஷ் உள்ளிட்டோர் செய்தனர்.
‘கடவுளுக்கு ஒரு கடிதம்’ என வாசகிகள் எழுதிய பிரார்த்தனைக் கடிதங்கள், திரிபுரசுந்தரி அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்டன.