

நாங்கள் செய்த பெரும்பேறால் நீ கிடைத்தாய்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்!
விளக்கவுரை:
கறவை மாடுகள் பின் சென்று, காட்டை அடைந்து,
மாடு மேய்த்து, உண்டு திரியும், சிறிதும் அறிவில்லாத,
இடையர் குலத்தில் பிறந்த நாங்கள், உன்னை எங்களுக்குள் ஒருவனாக
பெறுவதற்கு என்ன புண்ணியம் செய்தோம்!
எவ்விதக் குறையும் இல்லாத கோவிந்தா!
நமக்குள் உண்டான உறவை எங்களாலும், ஏன் உன்னாலும்
ஒழிக்க முடியாது!
கண்ணபிரானே! ஒன்றும் அறியாத சிறுமியரான நாங்கள் உன்னைத்
தோழனாக கருதி அன்பால்.. சிறிய பெயரால் அழைத்ததைப் பற்றி கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் விரும்பியவற்றைத் தந்தருள வேண்டும்.
(சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களைக் கோபிக்காது, எங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயாக!)
இதையும் அறிவோம்:
1945-ல் காஞ்சி மஹா பெரியவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடம் திருப்பாவையை இசையமைத்துப் பாட பணித்தார். 1952-ல் அரியக்குடி இந்த பணியை நிறைவு செய்தார். ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கோயிலில் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் முப்பது திருப்பாவை பாடல்களையும் ஆண்டாள் முன் பாடி அரங்கேற்றினார். இன்றும் அரியக்குடி மெட்டமைத்த திருப்பாவையே பரவலாக எல்லா இடங்களிலும் பாடப்படுகிறது. எந்த மாற்றமும் இல்லாமல் இசைக்குத் தகுந்தவாறு திருப்பாவை அமைந்திருக்கிறது என்பது இதன் இன்னொரு சிறப்பு.
- சுஜாதா தேசிகன்